காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்காடி வாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவரது மகள் பார்வதியை உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த குமாரவேல் என்பருக்கு திருமணம் செய்து வைத்து, தற்போது 6 மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார்.
பார்வதி தனது வாக்காளர் அடையாள அட்டையை பிறந்த ஊரான சிங்காடிவாக்கத்தில் இருந்து உத்திரமேரூர் பகுதிக்கு மாற்றாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தனது பிறந்த ஊரான சிங்காடி வாக்கத்தில் உள்ள தனது ஓட்டை செலுத்துவதற்காக கைக்குழந்தையுடன் வாக்குசாவடி மையத்திற்கு சென்றார்.
பார்வதி செல்வதற்கு முன்பே அவரது ஓட்டை கள்ள ஓட்டாக மற்றொருவர் பதிவு செய்து விட்டு சென்று விட்டார் என்பது தெரியவந்தது.
இதை அறிந்த பார்வதி அதிர்ச்சி அடைந்து வாக்குப்பதிவு மைய அலுவலரிடமும், வேட்பாளர்களின் முகவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதைத்தொடர்ந்து பார்வதி, நடிகர் விஜய் நடித்த சர்கார் பட பாணியில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சர்க்கார் படத்தில் விஜய் ஓட்டை செலுத்தியதை போல 49 பி படிவத்தை பார்வதிக்கு வழங்கி சேலஞ்ச் ஓட்டை பதிவு செய்ய வைத்தனர்.
கள்ள ஓட்டாக போட்ட தனது ஓட்டை விட்டு விட்டு செல்லாமல் கைக்குழந்தையுடன் வந்து போராடி தனது ஜனநாயக கடமையாக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பார்வதியை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.