

சிறார் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.வாழ வேண்டிய இளம் தலைமுறை தற்கொலையை நாடுவது எந்த அளவுக்கு அவரிகள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்திடம் இருந்து ஆறுதல் தேவை என்பதை உணர்த்துகிறது.இதை தடுக்க என்ன வழி?
கடந்த ஆண்டு மட்டுமே ஒரு நாளுக்கு 31 இளம் சிறார்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.2020ம் ஆண்டில் நாடு முழுவதும், 18 வயதுக்கு உட்பட்ட 11,396 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது 2019ம் ஆண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகம். 2019ல் 9,613 சிறுவர்களும், 2018ல் 9,413 சிறுவர்களும் தற்கொலை செய்துள்ளனர். இந்த 1,396 பேரில் 5,392 பேர் சிறுவர்கள், 6,004 சிறுமிகள். சராசரியாக தினசரி 31 சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில், குடும்ப பிரச்னை (4,006 பேர்), காதல் விவகாரம் (1,337), உடல் நல பாதிப்பு (1,327) ஆகியவை 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைகளின் தற்கொலை அதிகரித்து வருவதாக கூறப்படுவது உண்மையா எனவும் அது உண்மையெனில், தற்கொலையைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்றும் மக்களவையில் பாரிவேந்தர் எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, குழந்தைகள் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தடுக்க மத்திய கல்வித்துறை மனோதர்பன் என்ற செயலாக்க முன்முயற்சி திட்டத்தை கொண்டுவந்துள்ளதாகக் கூறினார்.
அது, மாணாக்கர், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு மனநலம் மற்றும் உணர்வுப்பூர்வமான உளவியல் ஆதரவை வழங்கிட பரந்த அளவிலான செயல்பாடுகளை உள்ளடக்கிய திட்டமாகும் என்றும் தெரிவித்தார். குழந்தைகளின் கவலைகளை பகிர்ந்து கொள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் நாடு முழுவதும் கலந்தாய்வு மையங்களை தொடங்கி நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 270 ஆலோசகர்கள் இலவசமாக சேவை வழங்கி வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா விளக்கமளித்தார்.
