

இயக்குநர்களிடம் கதை கேட்டபோது தூங்கிய ஒரே காரணத்துக்காக தமிழ்நாடெங்கும் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் கதாநாயகனாக நடித்துள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ பட வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்குகளுக்கும் தகவல் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தை டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப் படக்குழு தீர்மானித்திருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படம் தற்போது இந்த மாதம் வெளியாகாது என்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று தகவல்கள் வந்து கொண்டுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 5 அன்று சென்னை T. நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். இதில் பேசிய அஸ்வின், “நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான்” என்று கூறியிருந்தார். அஸ்வினின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் பலரும் அஸ்வினைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். விமர்சனங்களை அறிந்த தயாரிப்பாளர் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க கூறியும் அதனை தவிர்த்துவிட்டார். அஸ்வின் இது சம்பந்தமாக சில பத்திரிகையாளர்கள் அவரிடம் விளக்கம் கேட்டபோது என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசி விட்டேன், நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என மீண்டும் குழப்பமாகவும், நையாண்டியாகவும் பதில்கூறினார்.இதனால் தயாரிப்பாளர் தரப்பில் படத்தை திட்டமிட்டபடி டிசம்பர் 24 அன்று வெளியிட்டால் படத்திற்கு எதிர்மறையான கருத்துகள் வருமோ என்கிற பயம் ஏற்பட்டுள்ளதால் பிரச்சினையை ஆறப்போடலாம் என்கிற முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படம் இதற்கு முன்பும் ஓரிரு முறைகள் தள்ளிப்போனதால் பேசாமல் படத்தின் பெயரை ‘என்ன தள்ளிப் போகிறாய்?’ என்றே வைத்துவிடலாம் என்கின்றனர் தமிழ் திரையுலக விமர்சகர்களும், விநியோகஸ்தர்களும்.