மதுரை பரவையில் உள்ள மங்கையர்கரசி கல்வியியல் கல்லூரியில் பி.எட்., எம்.எட்., பட்டம் பெற்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்

“நமக்குள்ள ஒரே சொத்து கல்வி. குறிப்பாக பெண்களுக்கு கல்வி மிகவும் முக்கியம். பெண்கள் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பாவது படித்திருக்க வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக பி.எட். படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. பொதுவான அரசு வேலைவாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. வருவாய்த்துறையை பெருக்கி, பட்டப்படிப்பை முடித்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசின் கடமை.

மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் பெண்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்க முடியாத நிலை இருந்தது. தற்போது அங்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்று இன்னும் பல கிராமங்கள் உள்ளதால் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது.
மக்களுக்கு அடிப்படையாக செய்ய வேண்டிய சாதாரண விஷயங்களே இன்னும் நிறைய உள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக அரசு நல்ல நிதி நிலையில்தான் உள்ளது. விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆவினுக்கு தேவையான பால் கொள்முதலிலும் பிரச்சினைகள் உள்ளன. எனவே அடிப்படை பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது, தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் லஞ்சம் கேட்பது போன்ற செயல்களை நிறுத்தியுள்ளோம். பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்துள்ளோம்.

ஊழல் அல்லது லஞ்சம் கேட்பது போன்ற பிரச்சினைகள் இருந்தால் அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் பொதுமக்கள் நேரடியாக தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் முதலமைச்சர் கலங்கிவிடுகிறார். பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து நல்ல நிர்வாகத்தை வழங்கி வருகிறோம்” என்றார்.





