கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் 8 ஏக்கர் நிலத்தை விற்பதாக கூறி ரூபாய் 60 லட்சம் மோசடி செய்த புரோக்கர் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

கோவை ஜி.என் மில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் பல இடங்களில் நிலத்தை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு புரோக்கர்களான கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த சரவணன், பீளமேடு சேர்ந்த வெங்கடாசலபதி ஆகியோர் அறிமுகமானார்கள்.
கோவையைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் அவருக்கு, சொந்தமான சொத்துக்களை விற்க தங்களுக்கு அதிகாரம் கொடுத்து உள்ளார் என்றும், எனவே அவருடைய சொத்துக்களை விற்பனை செய்து வருகிறோம் என்றும், ஜெகநாதனிடம் கூறினார்.
மேலும் இந்தப் பகுதியில் உள்ள சிவராம் நகரில் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை விற்பனை செய்ய உள்ளதாகவும், தெரிவித்து உள்ளனர். அந்த நிலத்தை ஜெகநாதன் வாங்க முடிவு செய்தார். இதற்காக அவர் ரூபாய் 10 லட்சத்தை வங்கி மூலம் சரவணன், வெங்கடாசலபதி ஆகியோர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார். மேலும் ரூபாய் 50 லட்சத்தை அவர்களிடம் நேரடியாக வழங்கினார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட பல நாட்கள் ஆகியும் அவர்கள் ஜெகநாதனுக்கு நிலத்தை விற்பனை செய்யவில்லை,

இது தொடர்பாக அவர் நேரில் சந்தித்து அவர்களிடம் கேட்ட போது பணத்தை திரும்பி கொடுக்க மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து ஜெகநாதன் துடியலூர் காவல் துறையினருக்கு புகார் செய்தார். அதன் பெயரில் காவல்துறை ஆய்வாளர் விவேகானந்தர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடாசலபதியை கைது செய்தனர். சரவணனை வலை வீசி தேடி வருகின்றனர்.





