• Sun. Dec 3rd, 2023

காண இருகண்களும் போதாது முருகா..!
பன்னிரண்டு மாதமும் திருவிழாதான் திருப்பரங்குன்றத்தில்..,

ஆறு படைகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மாதம் தோறும் திருவிழாதான். இப்படி திருவிழாவை காண்பதற்கு நம் இரு கண்கள் போதாது. திருமணக்கோலத்தில் சுப்பிரமணியசுவாமியும், தெய்வானை அம்மையும், நாரதர் முனிவரோடு சூரியன், சந்திரனும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாவிக்கும் ஒரே ஸ்தலம் திருப்பரங்குன்றம்தான்.


அப்படி என்ன மாதம்தோறும் திருவிழாக்கள் நடக்கும் என்கிறீர்களா?
தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை மாதம், ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் மதுரை மீனாட்சிஅம்மன் திருக்கல்யாண வைபவத்திற்கும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கும் அருள்மிகுசுப்;பிரமணிய சுவாமியும், தெய்வானை அம்மையும், தூங்கா நகரம், ஆன்மீக நகரமான மதுரைக்குச் சென்று பக்தர்களுக்கு அருள்பாவிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

அடுத்தமாதமான வைகாசி மாதத்தில் ஊர் உலகமெல்லாம் திருவிழாக்களைக் கொண்டாடலாம். ஆனால், குமரனுக்கு திருவிழா கொண்டாடுவது எப்போதுமே ஒரு அழகுதான். அந்த அழகு திருவிழாதான் வைகாசி திருவிழா. இந்த வைகாசி மாத திருவிழாவில் லட்சக்கணக்கானோர் பால்குடம் எடுத்து வந்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி தெய்வானைக்கு பாலாபிஷேகம் செய்யும் பெரும் நிகழ்வு நடைபெறும்.
இந்தத் திருவிழாவில் பால்குடம் மட்டுமல்ல, பறவைக்காவடி, அலகுகுத்துதல், முருகன் கையில் இருக்கும் வேலே துணை என்று வேல்குத்துதல் என திருப்பரங்குன்றமே பால் மணம் வீசக் கூடிய அளவிற்கு திருவிழா நடைபெறும்.

மூன்றாவது மாதமான ஆனி மாதத்தில் உற்சவர் முருகப்பெருமானும், தெய்வானையும் திருவாச்சி மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து மிக சந்தோஷமாக ஆனந்தத்தோடு வரும் பக்தர்களுக்கு அருள்பாவிக்கின்ற நிகழ்வு நடைபெறும். இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலை ஆக்கிரமிப்பார்கள்.

நான்காவது மாதமான ஆடி மாதத்தில் திருமணக்கோலத்தில் சுப்பிரமணியசுவாமியும், தெய்வானை அம்மையும் நாரத முனிவரோடு சூரியன், சந்திரனும் அமர்ந்த கோலத்தில் இருந்தபடியே பௌர்ணமி பூஜை நிகழ்வு நடைபெறுவதால், பக்தர்கள் ஆனந்தத்தோடு கிரிவலம் வந்து இந்தக் கோலத்தைப் பார்ப்பது பிரமிப்பாகவே இருக்கும்.

ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமியும், தெய்வானை அம்மையும் – மதுரைக்கு பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வைக் காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மனும், சொக்கநாதரைக் காண்பதற்காக செல்லும் நிகழ்வு அனைவரையும் பிரமிக்க வைத்தாலும், தந்தையை மகன் காண்பதும், மகன் தந்தையைக் காண்பதும் ஒரு ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்வாகவே இந்த நிகழ்வு நடைபெறும்.
ஆறாவது மாதமான புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா. நவராத்திரி திருவிழா என்றாலே ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்தமாதம் புரட்டாசி மாதம் என்பார்கள். அப்படி இருந்தாலும் கூட, இந்த நவராத்திரி திருவிழாவில் சுப்பிரமணியசுவாமியே தசாவதாரம் எடுத்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு பெரும் விமர்சையாக நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, வேல் வேல் வெற்றி வேல் என்று லட்சக்கணக்கான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து தனக்கு கிடைக்கக் கூடிய 16 செல்வங்களையும் பெற்று சந்தோஷமாக வீடு திரும்புவதுதான் திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி திருவிழா.

எட்டாவது மாதமான கார்த்திகை மாதத்தில் உலகிற்கு ஒளியாய், மனதிற்கு நிறைவாய் திருப்பரங்குன்றம் முருகனே என்று போற்றக்கூடிய அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலான திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்வு. அதுவும் திருவண்ணாமலை அண்ணாமலையாரின் தீபம் போன்று திருப்பரங்குன்றம் மலை மீதும் தீபத்தை ஏற்றி அலைகடலென பக்தர்கள் வெள்ளத்தில் தீபம் ஏற்றும் நிகழ்வு கார்த்திகை மாதத்தில் நடைபெறும். அதைக் காண்பதற்கு மதுரை மக்கள் மட்டுமல்ல, சுற்றி உள்ள ஊர்களில் இருந்தெல்லாம் மாட்டுவண்டி கட்டி தீபஒளியைக் காண வரும் நிகழ்வுதான் கார்த்திகை மாத நிகழ்வு.

ஒன்பதாவது மாதம், அதுவும் குளிர்மாதமான மார்கழி மாதத்தில், ஆருத்ரா தரிசனம் நடராஜரை தரிசனம் செய்யலாம். அப்போது முக்கிய வீதிகளில் சுவாமி புறப்பாடும் உண்டு. பத்தாவது மாதமான தைமாதத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மையும் கோயிலுக்கு எதிரே ஜி.எஸ்.டி ரோட்டில் உள்ள மிகப்பெரிய தெப்பக்குளத்தில் நீரை நிரப்பி, நீருக்கு மேல் மிகப்பெரிய சப்பரத்தை அமைத்து மூன்று முறை வலம் வரும் தெப்பத் திருவிழா நிகழ்;ச்சி நடைபெறும். இந்தத் திருவிழாவைக் காண்போர்கள் கண் இமைகள் மூடாமல் முருகனைக் கண்டு ரசிக்கும் அழகே தனிதான். பதினோறாவது மாதமான மாசி மாதத்தில் மாசி மகம் திருவிழாவாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, குமாரசுவாமியாக மாறி பக்தர்களுக்கு வீதி உலா வந்து காட்சி கொடுக்கும் நிகழ்வு. குமாரசுவாமியே மலை இறங்கி வந்துட்டாருப்பா, நம் கஷ்டமெல்லாம் தீந்துடும்பா என்று வாய்விட்டு சொல்லக் கூடிய நிகழ்வு நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

பன்னிரண்டாவது மாதமான பங்குனி மாதத்தில், உத்திரத் திருவிழா முருகனுக்கு சொல்லவா வேண்டும். பங்குனி என்றாலே உத்திரம், உத்திரம் என்றாலே பங்குனி. முக்கிய வீதிகளில் தினமும் சுவாமி உலா வருவதும், ஊரே சேர்ந்து திருவிழா எடுத்து அப்பன் முருகனையும், தெய்வானை அம்மையாரையும் மிகப்பெரிய சப்பரத்தில் அமர வைத்து கிரிவீதியில் தேரை வடம் பிடித்து இழுத்து வந்து மீண்டும் கோயிலுக்குச் சென்றடைவதுதான் இங்கு நடைபெறும் மிகப்பெரிய திருவிழா.
இப்படி 12 மாதங்களும் திருவிழாக் கோலம் கொண்ட அருள்மிகு சுப்பிரமணியசுவாமியும், தெய்வானை அம்மையும் காண்பதற்கு பக்தர்களுக்கு கண்டிப்பாக இரு கண்கள் போதாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *