சபரிமலை ஐயப்பன் கோவில் பிரதிஷ்டை தின பூஜைகளை முன்னிட்டு இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. நாளை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும்.
கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும் சபரிமலை. மஹிஷி என்ற பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எல்லா மதத்தினரும் வரவேற்கப்படுகிறார்கள். இது ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை. இந்த கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு, விஷ_ மற்றும் மலையாள மாதத்தின் முதல் நாட்களில் மட்டும் திறந்திருக்கும்.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும். அதேபோல் சபரிமலை காசியை போன்ற புனித ஸ்தலமாகும். பரசுராமர் கடலுக்கு அடிப்பகுதியிலிருந்து கேரள நிலத்தை சபரிமலையின் உயரத்திற்கு எழுப்பி அவரே ஐயப்ப சுவாமியின் திருவுருவத்தை சிலையாக செதுக்கி பிரதிஷ்டை செய்தாக தல வரலாறு கூறுகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.