• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..,

Byஜெ.துரை

Apr 29, 2026

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் திரண்டனர்.

அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அரவான் எனப் போற்றப்படும் கூத்தாண்டவர் எழுந்தருள, பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

தேரோட்டத்தின் போது பக்தர்கள் தேங்காய் உடைத்தும், மலர் தூவியும், அர்ச்சனை செய்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

கூவாகம் திருவிழா, திருநங்கைகள் சமூதாயத்தின் ஆன்மிக மற்றும் பண்பாட்டு அடையாளமாக விளங்குகிறது. மகாபாரதக் கதாபாத்திரமான அரவானை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த விழா, சமத்துவம், அன்பு, ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

தேரோட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகள், கூத்தாண்டவரை வழிபட்டு தங்கள் வாழ்வில் வளம், நலம், மனநிறைவு கிடைக்க பிரார்த்தனை செய்தனர்.

பலர் பாரம்பரிய உடைகளில், உற்சாகத்துடனும் பக்தி பரவசத்துடனும் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டதுடன், மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி, அவசர உதவி மையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று தேரோட்டத்திற்கு பின் தாலியறுப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.