• Sat. Apr 20th, 2024

அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

ByA.Tamilselvan

Jun 17, 2022

37 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரு ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு மயிலாப்பூர் கோவில் மயில் சிலை குறித்து இறுதிகட்ட விசாரணை நடைபெறுகிறது – சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பேட்டி.
மதுரையில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு, காவல்துறை இயக்குனர் ஜெயந்தமுரளி , சிலை தடுப்புபிரிவு காவல்துறை தலைவர் தினகரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது:
1985-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு நரசிங்கநாதர் கோவிலில் இருந்து 11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கங்காள நாதர் மற்றும் அதிகார நந்தி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளன, 1986-ம் ஆண்டு சிலைகளை மீட்க முடியாமல் உள்ளூர் போலீசாரால் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு சிலைகளும் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகர அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன, யார் கடத்தியது, எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வெளி நாடுகளில் இருந்து இதுவரை 22 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன,இந்த ஒரே ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 10 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன எனவும், சிலைகள் பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்தப்பட்டு உள்ளன, இன்னும் 40-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட வேண்டும், எனவும், மதுரையிலுள்ள மரகதலிங்கம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. , வெளிநாடுகளில் இருந்த கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுவருவதில் பல்வேறு நீண்ட நெடிய நடைமுறைகள் உள்ளன என்றார். மேலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலைகள் காணாமல் போன வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது, தமிழகத்தில் உள்ள சிலைகள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட சுபாஷ் கபூர் மீது மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள நரசிங்கநாதர் கோவிலில் இருந்து 11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கங்காள நாதர் மற்றும் அதிகார நந்தி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகளையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு,காவல் துறை இயக்குனர் ஜெயந்தமுரளி, காவல்துறை தலைவர் தினகரன் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி ஆகியோர் கோவில் செயல் அலுவலர் கண்ணதாசனிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *