சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, சீன பல்கலைக் கழகங்களில் படித்து வந்த ஏறக்குறைய 22,000 இந்திய மாணவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதன்பின், அவர்களை சீனாவுக்கு திருப்பி அழைத்துக் கொள்ளும்படி இந்தியா பலமுறை வேண்டுகோள் வைத்தும் அது ஏற்கப்படவில்லை. அவர்களை சீனாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு அனுமதி மறுத்து விட்டது. இதனால் இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களது படிப்பை தொடர முடியாமல் கைவிட கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (ஐ.ஏ.டி.ஏ.) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சீன நாட்டினருக்கு வழங்கிய சுற்றுலா விசாக்கள் இனிமேல் செல்லுபடியாகாது என தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட பயணிகளின் விவரங்களையும் வெளியிட்டு உள்ளது. பூடான், மாலத்தீவுகள் மற்றும் நேபாளம் ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள், இந்தியாவால் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட பயணிகள், விசாவுடன் கூடிய பயணிகள் அல்லது இந்தியாவால் வழங்கப்பட்ட இ-விசா வைத்திருப்போர், இந்திய குடிமகன் என்பதற்கான அட்டை அல்லது கையேடு வைத்திருக்கும் பயணிகள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான அட்டையை கொண்டுள்ள பயணிகள் மற்றும் தூதரக பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகள் ஆகியோருக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மாணவர்களை திருப்பி அழைத்துக் கொள்வதில் தயக்கம் காட்டி வரும் சீனாவிற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என கூறப்படுகிறது.