• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மீனவர்கள் வலையில் சிக்கிய பழங்கால கற்சிலை..,

ByM.I.MOHAMMED FAROOK

Jul 11, 2026

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த நிர்மல் விஷ்ணு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 5-ஆம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று மகாபலிபுரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் பழங்கால கற்சிலை ஒன்று சிக்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள், உடனடியாக கிராம பஞ்சாயத்தினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, இன்று காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் திரும்பிய விசைப்படகை, கிராம பஞ்சாயத்தினர், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஆய்வு செய்தனர். பின்னர், மீட்கப்பட்ட கற்சிலையை கைப்பற்றி, காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) பூஜாவிடம் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட ஆய்வில், சிலையின் தலையின் மேற்பகுதியில் பாம்பு வடிவமும், நான்கு கரங்களும், கீழ்பகுதியில் யானை உருவமும் செதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், இது பழங்கால விஷ்ணு சிலையாகவோ அல்லது பல்லவர் கால சிற்பக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்ட தொன்மையான கற்சிலையாகவோ இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சிலையின் காலம், வரலாற்றுப் பின்னணி மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் குறித்து தொல்லியல் துறை மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.