தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. சென்னையில், 1939 டிசம்பர் 7ல் பிறந்தார். பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா தம்பதிக்கு பிறந்தார் லூர்து மேரி ஈசுவரி.
இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் “லூர்துமேரி ராஜேஸ்வரி”. எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார் . மனோகரா படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் “இன்ப நாளிலே இதயம் பாடுதே” என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர்.
அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். 1958ல் வெளியான, நல்ல இடத்து சம்பந்தம் என்ற படத்தில், பின்னணி பாடகியாக அறிமுகமானார். பாசமலர் படத்தில், ‘வாராயென் தோழி…’ என்ற பாடல், இவருக்கு புகழை தேடி தந்தது.
‘பளிங்கினால் ஒரு மாளிகை, குடிமகனே, எலந்த பழம், முத்துக் குளிக்க வாரீகளா…’ உட்பட, 1,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளிலும் பின்னணி பாடியுள்ளார்.இவர் பாடிய, ‘கற்பூர நாயகியே, செல்லாத்தா, மாரியம்மா எங்கள் மாரியம்மா…’ உள்ளிட்ட அம்மன் பக்தி பாடல்கள், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
இந்த காந்த குரல் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பிறந்த தினம் இன்று!