தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவது பெரும் பரபரப்பையும், பீதியையும் உருவாக்கி வருகிறது.
தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளித் திறப்பின் போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன. மாணவர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.
பள்ளிகளிலும் மாஸ்க், சானிடைசர் போன்றவை வைத்திருக்க வேண்டும். ஒரு பெஞ்சில் இரு மாணவர்கள் மட்டுமே அமர வைக்க வேண்டும். ஆசிரியர்கள் இரு தவணை தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதை விட பள்ளிகள் மாணவர்கள் வருவது கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்ட 3வது நாளிலிருந்தே நாமக்கல், பொள்ளாச்சி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையும், மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்பேரில் பள்ளிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நேற்று வந்த பரிசோதனை முடிவில் மேலராணி அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலக ஊழியர் ஒருவர், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 2 பேர், வாழ்விடந்தாங்கல் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், செங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், வழுதலங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 மாணவிகள், மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர், பெருங்களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் என 11 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.