ஆவணி மாதங்களில் திருவிழாக்கள் அதிகம் நடத்தப்படும் என்பதாலும், அதிக அளவில் பக்தர்கள் கூட வாய்ப்புள்ளதாலும் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆவணித்திருவிழா நடைபெறுவதால் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று அதிகாலை 5.45 மணி அளவில் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் கோவில் கொடி மங்கள வாத்திய இசையுடன் கொடி மரத்துக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகளும் நடைபெற்றது.
இந்நிலையில் பக்தர்கள் வீட்டிலிருந்தே காண இணையதளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 31ஆம் தேதி 5 ஆம் திருநாளான குடவருவாயல் தீபாராதனையும், செப்டம்பர் 02ஆம் தேதி 7ஆம் திருநாளன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 03ஆம் தேதி 8ஆம் திருநாள் பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது
முருகப் பெருமான் இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும்.
அதை காட்டும் வகையில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி தேரோட்டங்கள் நடைபெறும். சிவப்பு சாத்தி தேரோட்டத்தின் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாம் சிவப்பாக இருக்கும். அதுபோல வெள்ளை சாத்தி ஊர்வலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும். வெள்ளை சாத்தியை கண்டு இறைவான தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்துள்ளனர்.
இதனால் வெள்ளை சாத்திக்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.
10ஆம் தேதியன்று நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெறும் என அறிவித்து பக்தர்கள் கோவிலுக்குள் வராத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன
. திருக்கோவிலில் பக்தர்கள் புனித நீராடும் நாழிக் கிணற்றில் நீராட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலிலும் நாழிக்கிணறிலும் புனித நீராட அனுமதிக்கப்பட்டது. தற்பொழுது ஆவணித்திருவிழா தொடங்கியுள்ளதால் புனித நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தனர்.