

தொடர் கனமழை காரணமாக கொடைக்கானலில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் விவசாய பணிகளுக்கு சென்ற தொழிலாளர்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை 3 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக கொடைக்கானல் பழனி செல்லக்கூடிய பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இந்த காட்டாற்று வெள்ளத்தில் கொடைக்கானல் பேத்துப்பாறை அடுத்த வயல் பகுதியில் விவசாய பணிகளுக்கு சென்ற சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். இதனால் இவர்கள் வீடு திரும்ப முடியாமல் பல மணி நேரம் தவித்தனர். இதை அறிந்த இந்த பகுதி கிராம மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடு திரும்ப முடியாமல் தவித்த பெண்கள் மற்றும் ஆண் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை கயிறு கட்டி ஆபத்தான முறையில் மீட்டனர்.இந்த பகுதியில் இதுபோன்று காட்டாற்று வெள்ளம் ஏற்படுவது அடிக்கடி நிகழ்வதால் இதற்கு உரிய மேம்பாட்டு நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
