சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், அவரது கல்வி நிறுவனம், சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. மேலும் இவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனைக்கு முக்கிய காரணம் புத்திர கவுண்டம்பாளையத்தில் தற்போது இவர் கட்டி வரும் மாளிகை போன்ற வீடும், பண மதிப்பு இழப்பின் போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இளங்கோவன், ஜெயலலிதா பேரவையின் புறநகர் மாவட்ட செயலாளராகவும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்தவர். மேலும், சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக அறியப்படுபவர் இளங்கோவன். பழனிசாமியின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபர். தற்போது இவர் வீட்டில் ரெய்டு நடந்திருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்தடுத்து அதிமுக முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அவலுகங்களில் சோதனை நடைபெற்று வருவது அதிமுக-வினரிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.