கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில், நிர்வாகங்களின் பேராசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும் பேராசிரியர்களின் பணி மேம்பாடு தொடர்பான தமிழக அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த கேட்டும் கன்னியாகுமரி மாவட்ட கல்லூரிகள் முன்பு பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோயில் உட்பட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள் முன்பு இன்று மனோன்மணியம் சுந்தரனார், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றத்தின் சார்பில் கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் குறித்து பேராசிரியர்கள் கூறுகையில், தமிழகத்தில் கடந்த ஆட்சியில் 4 ஆண்டுகளாக பேராசிரியர்களுக்கான பணி மேம்பாடு வழங்காத நிலையில், பேராசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தற்போதைய அரசு பணி மேம்பாடு தொடர்பாக அரசாணை வெளியிட்டதாகவும், தற்போது திடீரென அந்த அரசாணையை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், நிறுத்தி வைக்கப்பட்ட அரசாணையை நடைமுறைபடுத்த கேட்டும் தூத்தூர், அகஸ்தீஸ்வரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நிர்வாகங்களின் ஆசிரியர் மீதான நடவடிக்கைகளை ரத்துசெய்ய கேட்டும் போராட்டம் நடைபெற்றதாக தெரிவித்தனர்.