தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து உள்ளது. முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய ஒரு கட்சி இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் கடந்த சில நாட்களாக அரசியல் களத்தில் கடும் பரபரப்பு நிலவி வருகிறது.
மொத்தம் 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை அறிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 உறுப்பினர்களின் ஆதரவை வழங்கின. இதனால் தவெகவின் ஆதரவு பலம் 117 ஆக உயர்ந்தது.
விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்த பிறகு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்றாலும், பெரும்பான்மையை உறுதி செய்ய விசிக ஆதரவு மிக முக்கியமாக மாறியுள்ளது.
இந்த சூழலில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவை தமிழக அரசியல் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தது. தற்போது விசிக தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் இழுபறிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.



