தேனி அல்லிநகரம் நகராட்சியில், நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கலுக்காக, ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த தி.மு.க., வினர் குவிந்ததால், அதிகாரிகள் திக்கு முக்காடினர். மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் சுமார் 198 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி, நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 28ம் தேதி முதல் நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட. விருப்பமுள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். தேனி மாவட்டத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் முந்திக் கொண்டது. ஆனால், தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் கடைசி நேரம் வரை ‘ரகசியம்’ காத்து வந்தது. இதனால் தனக்கு போட்டியாக களமிறக்கப்பட்டவர் யார்? என தெரியாமல் அ.தி.மு.க., வினர் குழம்பிக்கொண்டிருந்தனர். இதற்கு விடிவுகாலம் பிறக்கும் வகையில், வேட்புமனு தாக்கல் நிறைவு நாளான இன்று (பிப்.,4) ஒட்டுமொத்த தி.மு.க., வேட்பாளர்கள் நல்ல நேரம் பார்த்து மதியம் 1:30 மணியளவில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரே நேரத்தில் குவிந்ததால், நகராட்சியில் மனுக்கள் பெறும் அதிகாரிகள் திக்கு முக்காடினர். தி.மு.க., சார்பாக 20வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன், 10வது வார்டுக்கு ரேணுப்பிரியா பாலமுருகன், 6வது வார்டுக்கு அனுசுயா, 9வது வார்டுக்கு தனலட்சுமி, 11வது வார்டுக்கு எஸ்.பழனியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக, காலை 11 மணியளவில் அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான சுந்தரபாண்டி மனைவி எஸ்.மகாலட்சுமி 10வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் 198 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

