• Mon. Dec 2nd, 2024

கோவையில் தி.மு.கவுடன் மல்லுக்கட்டும் இடதுசாரிகள்..!

Byவிஷா

Feb 4, 2022

கோவை மாவட்டத்தில் உள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சியில், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுகவுடன் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய கட்சிகள் புதுக் கூட்டணி தனித்து போட்டியிடுவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் பேரூராட்சியில் சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏமாற்றம் அடைந்த சிபிஐ மற்றும் சிபிஎம் இடதுசாரி கட்சிகள் திமுகவுடனான கூட்டணியை வியாழக்கிழமை முறித்துக்கொண்டன. திமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் ஆதரவுடன், இடதுசாரிகள் மக்கள் சேவை முன்னணி என கூட்டணி அமைத்து கண்ணம்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 11 வார்டுகளில் இடதுசாரிகள் போட்டியிடுகிறார்கள். இதில், சிபிஐ 10 வார்டுகளிலும் சிபிஎம் 1 வார்டிலும் போட்டியிடுகின்றன. திமுக சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கண்ணம்பாளையம் பேரூராட்சித் தலைவர் பதவியை வழங்க மறுத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்ணம்பாளையம் பேரூராட்சி தேர்தலில் இடதுசாரிகள் தங்கள் கூட்டணி கட்சியான திமுகவுடன் மல்லுக்கட்டுகிறார்கள்.
கண்ணம்பாளையம் பேரூராட்சியில், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் தனித்து தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக இடதுசாரி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். இந்த பேரூராட்சியில், தங்களுக்கு வலுவான வாக்கு வங்கி இருந்தும், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் எங்களின் கோரிக்கைக்கு திமுக தலைவர்கள் செவிசாய்க்கவில்லை. சீட் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தனித்து போட்டியிடுகிறோம் என்று இடதுசாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் பேரூராட்சியில், மொத்தம் 16,861 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பேரூராட்சியில், 1996 முதல் 2011 வரை மூன்று உள்ளாட்சித் தேர்தல்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. கண்ணம்பாளையம் பேரூராட்சியில் மட்டும் இடதுசாரிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக இடதுசாரி கட்சி நிர்வாகிகள் தெளிவுபடுத்தினர். மேலும், இந்த பேரூராட்சியில் மட்டும் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவது மாநில அளவிலான திமுக – சிபிஐ – சிபிஎம் கூட்டணியில் எந்த பிரச்னையையும் உருவாக்காது என்று நம்புகிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மௌனசாமி ஊடகங்களிடம் கூறினார்.
கண்ணம்பாளையம் பேரூராட்சியில், இடதுசாரிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி மக்கள் சேவை முன்னணி என புது கூட்டணியை உருவாக்கி போட்டியிடுவது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *