• Thu. Apr 18th, 2024

தேனி: ‘அடைமொழி’ ஆப்பிள்- இனிக்குமா…?

வேட்பாளரின் ‘அடைமொழி’ யை நினைவு கூறும் வகையில், வார்டு மக்களுக்கு நூதன முறையில் ‘ஆப்பிள்’ கொடுத்து, வாக்கு சேகரித்து வரும் 19வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளரால், எதிர்த்து போட்டியிடுபவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி முன்னிட்டு, நேற்றுடன் (பிப்.,4) வார்டு கவுன்சிலர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து வார்டு பகுதியில் ‘வட்டமிடும்’ வேட்பாளர்களால் தேர்தல் ‘சூடு’ பிடிக்க துவங்கிவிட்டது. முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் மற்றும் வார்டு மக்களை நேரடியாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கும் ஒரு படி மேலாக ‘அடைமொழி’ கொண்ட வேட்பாளர்கள் தங்களை நினைவு கூறும் விதத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது தான், சற்று வித்யாசமாக உள்ளது. 19வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் பி.சண்முகசுந்தரம் என்ற ‘ஆப்பிள்’ முருகன்.

இவர் வார்டு மக்களுக்கு மிகவும் பரிட்சியமானவர். காரணம் 2001 முதல் 2011 வரை வார்டு கவுன்சிலராக இருந்தவர். அது மட்டுமின்றி, கட்சியில் மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இதனால் வார்டு மக்களிடம் ‘சகஜமாக’ பழகக்கூடிய இவர் சமதர்மபுரம், எம்.ஜி.ஆர்., நகரில் வசிக்கும் தனது வார்டு மக்களை மரியாதை நிமித்தமாக நேரடியாக சந்தித்து, தன்னை நினைவு கூறும் வகையில் ‘ஆப்பிள்’ கொடுத்து அவர்களுக்கு வெண்ணிற பொன்னாடை அணிவித்து வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதை கவனித்த மற்ற வேட்பாளர்கள் நமக்கு ஒரு ‘அடைமொழி’ இல்லாமல் போனதே என வருத்தப்பட்டதையும் காணமுடிந்தது. எது எப்படியே, இந்த வார்டை பொறுத்தவரை ஆப்பிள் ‘இனிக்கும்’ என்றே நாமும்….நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *