• Sun. Jun 4th, 2023

அமைச்சர் என்ற மிதப்பில் அசால்ட். . . மண்ணை கவ்விய திமுக

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் சொந்த தொகுதியான திருப்பத்தூரில் உள்ள ஒரு பேரூராட்சியில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் தெய்வானை போட்டியின்றி தேர்வாகியிருக்கிறார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் பல இடங்களில் போட்டியின்றி பலர் கவுன்சிலர்களாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளரை தவிர திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

இதனால் அதிமுக பெண் வேட்பாளர் தெய்வானையின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்வை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரது எதிர்கோஷ்டியினர் திமுக தலைமைக்கு புகார் அனுப்பி வருகின்றனர்.

ஆளுங்கட்சியாக இருந்தும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு கூட வேட்பாளரை நிறுத்துவதில் கோட்டை விட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இடப்பங்கீட்டை சுமூகமாக முடிப்பதற்கே அமைச்சர் பெரியகருப்பனுக்கு நேரம் போதவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *