• Sat. Apr 27th, 2024

தனது கடமையை ஆளுநர் செய்யவில்லை – முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில்,அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி,பாமக,விசிக,மதிமுக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரின் கருத்துக்களை கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. இந்நிலையில்,ஆளுநர் தன் கடைமையை செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக,கூட்டத்தில் பேசிய முதல்வர்: “ஒவ்வொரு மாநிலமும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என மத்திய உயர்கல்வித்துறை முன்னதாக கூறியது.

இதற்கிடையில்,நீட் நுழைவுத்தேர்வை ஒழிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஏற்கனவே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். மேலும், அதனை நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது.


மேலும், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளோம். இதனால்,நீட் விலக்கு மசோதா முன்னதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி,நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.இந்த நீட் விலக்கு மசோதா 8 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஆனால்,அரசியலமைப்பு விதிப்படி தமிழக ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை.எனவே,சமூகநீதி போராட்டத்தை முன்னெடுக்கவே அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது”,என்று தெரிவித்துள்ளார்.


மேலும் நீட் தேர்வு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் அனைத்து கட்சிக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதனால சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் அடுத்த வாரம் கூட்டப்படலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இதற்கிடையில்,அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் ஆகிய கட்சியினர் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *