திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு, அனுக்கை விநாயகருக்கு கோ பூஜையும், மந்திர வாத்தியங்கள் இசைக்க, கோயில் ஸ்தானிக பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
உற்சவர் முருகன், தெய்வானை உடன் கைச்சப்பரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளிய நிலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.. முன்னதாக, கம்பத்தடியில் 16 வகையான அபிஷேகங்களும், தீப தூப ஆராதனைகளும் நடைபெற்றது.. முருகன், தெய்வானைக்கு அரோகரா கோஷம் முழங்க 10.47 மணியளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
கொரோனா கட்டுபாடுகள் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பக்தர்களின்றி கோயில் வளாகத்தில் நடைபெற்ற பங்குனி திருவிழாவிற்கு இந்த முறை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்..
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு நிகழ்வாக, சூரிய ஒளியானது, சூரியபகவானின் விக்கிரகம் மீது பட்டு, கம்பத்தடி வழியாக தெய்வானை சமேதமாக வீற்றிருக்கும் முருக பெருமான் முகம் மீது வெளிச்சமாக பரவியது… இதனால், திருப்பரங்குன்றம் பங்குனி விழாவிற்கு சூரிய பகவானே நேரில் வந்து வாழ்த்தியதாக, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கி சென்றனர்!
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.. கோயிலில் பூஜை பணிகளில் சுவாமிநாதன் பட்டர், செல்லப்பா, ரமேஷ், சுந்தரம் பட்டர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.