திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயில் பகுதியில் வசிக்கும் மயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பத்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இங்கு முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதனால் முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களில் திருமண வைபங்கள் களை கட்டும். இதன் காரணமாக கோயில் பிரதான சாலையான சன்னதி தெரு பக்தர்கள் மற்றும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும். மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அப்படி வரும் பெரும்பாலான பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த கையோடு, கிரிவலம் செல்வதுமுண்டு. மலைக்கு பின்புறம் மலையடிவாரப் பகுதியில் தென்பரங்குன்றம் என்னும் அழகிய ஊர் அமைந்துள்ளது. இப்பகுதியில் பரந்து விரிந்த கண்மாய்கள், வயல் நிலங்கள், ரோட்டோரம் கம்பீரமாக நிற்கும் பழமையான மரங்கள் நம்மை வரவேற்கும். அந்தளவிற்கு இந்தப் பகுதியில் எப்போதும் ரம்மியமான சூழ்நிலை நிலவும். இந்தப் பகுதிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இங்குள்ள கல்வெட்டு குகைக் கோயில், கன்னிமார் கோயில் மற்றும் பால் சுவை கண்ட சிவபெருமான் கோயில் உள்ளது. கோயிலுக்கு வரும் வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் இந்த கல்வெட்டு குகைக் கோவிலுக்கு வந்து அதன் அழகையும், அங்கு கல்வெட்டால் செதுக்கிய சிற்பங்களை கண்டு மெய்சிலிர்த்து செல்வதுண்டு. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்வெட்டு குகைக் கோயிலை சுற்றி ஏராளமான வண்ண மயில்களும், அதிசய வெள்ளை மயில்களும் முன்பு அதிக அளவு காணப்பட்டது. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் மயிலின் அழகை பார்த்து பரவசமடைவர். சிலர் காலை மற்றும் மாலையில் அதற்கு பிடித்தமான தானியங்களை உணவாக தூவி செல்வர். ஒரு சில பக்தர்கள் மயிலை முருகா முருகா என்று சத்தம் போட்டு அழைக்க மலைக் குன்றுகளில் இருந்தும், மரங்களின் மீதிருந்தும் கூட்டம், கூட்டமாக பறந்து வரும் அழகே தனி. இதுவும் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதேபோல் மயில்களின் இனப்பெருக்க காலம் முடிந்து, அதன் குஞ்சுகளுடன் ஒய்யாரமாக நடந்து வரும். இவற்றிற்கு மத்தியில் ஆச்சர்யமூட்டும் வகையில் திடீரென வெள்ளை மயில்களும் உலா வரும். இந்த அதிசய மயில்கள் சொற்ப அளவில் காணப்பட்டது. சில நேரங்களில் அவைகள் ஆனந்தமாக தோகை விரித்தாடும் அழகை கண்டு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உணவு மற்றும் தண்ணீர் அப்பகுதியில் போதுமான அளவு கிடைத்து வந்ததால் மயிலையும் அதிகளவு நம்மால் காண முடிந்தது. கிரிவலப் பாதை அருகேயுள்ள திருமறையூர் கிராமத்தில் பரந்து விரிந்த கண்மாய்
உள்ளது. இக் கண்மாய் ஒருமுறை நிரம்பினால் இரண்டாண்டுகள் வரை தண்ணீர் தேங்கி நிற்கும். அதேபோல் கண்மாயை சுற்றி பச்சை பசேலென நெற்பயிர்கள் பல ஏக்கரில் விளைந்து நிற்கும். இதனால், மயில்கள் மற்றும் குரங்குகளுக்கு தேவையான உணவு தடையின்றி கிடைத்து வந்தது. அவைகள் சந்தோஷமாக சுற்றித் திரிந்தன. காலப்போக்கில் ‘விளை நிலங்கள் எல்லாம் விலை நிலமாக’ மாறிவிட்டது. கண்மாய் சுருங்கியதால், தண்ணீர் பற்றாக்குறை இது போன்ற பல காரணங்களால் மயில்களுக்கு நாளுக்கு நாள் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மயிர்களின் எண்ணிக்கை குறைய துவங்கி, தற்போது விரல் விட்டு என்னும் வகையில் தான் மயில்கள் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் பெரிதும் வேதனையடைந்து வருகின்றனர். எனவே, கோயில் நிர்வாகம் இருக்கும் மயில்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.