• Thu. Jun 1st, 2023

எடப்பாடிக்கு எதிராக உருவாகும் ரகசிய டீம் ?

சசிகலா கட்சிக்குள் வருவாரா? மாட்டாரா? அதிமுகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

தற்போது திமுகவைவிட அதிமுகவில்தான் பரபரப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது.அதிமுகவின் தொடர் தோல்வியால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். இதனால் சசிகலா வந்தால்தான் கட்சி இயல்பு நிலைமைக்கு திரும்பும் என்று முக்கிய நிர்வாகிகளே நம்ப தொடங்கிவிட்டார்கள். ஒற்றை தலைமை என்ற முழக்கமும் எதிரொலித்து வருகிறது. ஆனால், சசிகலாவை சேர்க்க கூடாது என்ற எண்ணத்தில் இதுவரை எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து வருகிறார்.

சொந்த தம்பியை கட்சியில் இருந்து நீக்கியதை பார்த்தால், ஓபிஎஸ்ஸும் சசிகலா குறித்து எந்த முடிவையும் வெளிப்படையாக அறிவிக்க தற்போது வரை தயாரில்லை என்றே தெரிகிறது.. இவ்வளவும் அதிமுகவில் நடந்து கொண்டிருக்கும்போது, சசிகலா சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஆன்மீக பயணம் என்று மட்டுமே இதை எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், கிட்டத்தட்ட அரசியல் பயணமாகவே கருதப்பட்டு வருகிறது. அதனால்தான் சசிகலாவின் ஒவ்வொரு நிகழ்வையும் டெல்லி மேலிடமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. மற்ற மாநிலத்தேர்தலில் பாஜக கவனம் செலுத்தி வருவதால் தற்போது தமிழகத்தில் நடக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்ல டெல்லி பாஜக முன் வரவில்லை.

இப்போது 2 விதமான தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சசிகலா என்ற பேரை கேட்டாலே கொந்தளித்தவர்கள் சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயகுமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஆவர். எடப்பாடி பழனிசாமி சசிகலா பற்றி பேசியதை விட, இந்த மாஜிக்கள் தான் சசிகலாவை அதிக அளவு விமர்சித்தனர் தற்போது அத்தனை பேரும் கப்சிப் என்று ஆகிவிட்டார்களாம்.

அதிலும் எடப்பாடி ஆதரவாளராக கருதப்படும் வேலுமணி, தங்கமணி கூட சசிகலா பற்றி வாய் திறக்காமல் உள்ளனராம்.. இவர்கள் எல்லாரையும்விட ஜெயிலுக்கு போய் வந்ததில் இருந்தே ஜெயக்குமார் ஆப் ஆகி கிடக்கிறார் என்கிறார்கள். இப்படி ஒரு அமைதியை பார்த்துதான் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியில் இருக்கிறார் என்கிறார்கள். சசிகலாவை சந்தித்த ஓ.ராஜா, நீங்கள் தைரியமாக இப்போது எடப்பாடிக்கு எதிராக கிளம்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்த விஷயமும் எடப்பாடி காதுக்கு சென்றுள்ளது.. அப்படியானால், ஓபிஎஸ் தரப்பு எந்நேரமும் தனக்கு எதிராக மாறக்கூடுமோ என்ற கலக்கமும் அவரை சூழ்ந்துள்ளதாக தெரிகிறது.

மற்றொரு பக்கம் சுற்றுப்பயணத்தில் இருக்கும் சசிகலாவோ , எடப்பாடி விஷயத்தில் தொடர்ந்து பொறுமை காப்பதாக தெரிகிறது.. அதேசமயம், யாரெல்லாம் எடப்பாடி மீதான அதிருப்தியில் உள்ளார்களோ அவர்களை நேரடியாக சந்தித்து பேசவும் சசிகலா முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. இதற்காகவே அவர்களை சந்தித்து பேச ஒரு ரகசிய டீமை அனுப்பி வைத்துள்ளாராம். அதிமுக ஒன்றுபட்டு கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே அதிமுகவை மட்டுமல்ல, உங்களையும் சேர்த்து காப்பாற்றிக் கொள்ள முடியும். பணத்தை செலவழிக்க தயாராக இருக்கிறோம் என சசிகலா தரப்பில் உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே திமுக அரசு, அதிமுகவின் மாஜிக்களை கைது செய்து வருகிறது.. இனியும் கைது நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளது.. வேலுமணி, ஜெயக்குமாரையே மிரள வைத்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் மீதும் பாயலாம் என்று அதிமுக சீனியர்கள் கலங்கி வரும் நிலையில், சசிகலா அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படும் அந்த ரகசிய டீமிடம் சரண்டர் ஆகிவிடுவார்களா? அல்லது என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று எடப்பாடி பக்கமே ஆதரவு தந்து நிற்பார்களா? தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *