

மதுரை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்ட மேயர், ஆணையாளர் மனு அளிக்க வராததால் காலியாக நாற்காலிகள் .
மதுரை மாநகராட்சி சார்பில் செவ்வாய்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில், ஆணையாளர் கார்த்திகேயன், மண்டலத்தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து பொதுமக்களிடம் அபராதம் வசூல் செய்யப்படும் நிலையில், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் கார்த்திகேயன், அதிகாரிகள் என யாருமே முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்தனர்.
மேலும் பொதுமக்கள் மனுக்களை கொடுக்க 11 மணி வரை யாரும் வராததால் பொதுமக்களுக்காக போடப்பட்ட நாற்காலிகள் காலியாகவே இருந்தன.
மதுரை மாநகராட்சியில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, சாலை, தெரு விளக்கு, சொத்து வரி பெயர் மாற்றம் மற்றும் புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்களை ஒரு சில பொதுமக்கள் மேயரிடம் வழங்கிய நிலையில், செல்லூர் பகுதியை சேர்ந்த ஒய்வுபெற்ற காவல் ஆய்வாளர் முருகேசன் தனது மனைவியுடன் வந்து தான் வசிக்கும் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று சாலையை ஆக்கிரமித்து இருப்பதால் தண்ணீர் தேங்குவதாக புகார் மனு அளித்த போது, நீதிமன்றத்தில் இருப்பதை இங்கு கொண்டு வர வேண்டாம் எனக்கூறி, அவரை கிளம்ப சொல்லுங்கள் என்று கூறியதால் அதிகாரிகள் அலுவலர்கள் அவரை பேச விடாமல் அங்கிருந்து வேக வேகமாக அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
