நம் அனைவருக்குமே தெரியும். கல்லை தண்ணீரில் போட்டால் மிதக்கும் என்று. ஆனால், தண்ணீரில் மிதக்கக் கூடிய கல்விநாயகரை, நாமக்கல்லைச் சேர்ந்த சிற்பி ஒருவர் வடிவமைத்து அசத்தியுள்ளார்.
நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியை சேர்ந்த சிற்பி ஜெகதீசன் என்பவர், பரம்பரை பரம்பரையாக சிற்ப தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இவர் சிற்ப தொழிலில் புதுமையை புகுத்தி வித்தியாசமான சிலைகளை செய்வதில் வல்லவர். இவர் செய்த ஒற்றை கல்லினால் ஆன சங்கிலி மிகவும் தத்ரூபமாக இருக்கும். அதேபோல் ஒற்றை கல்லில் தேர் மற்றும் புல்லாங்குழலை செய்து 2009-ல் அப்போதைய வெளியுறவு துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி கைகளால் தேசிய விருதும் வாங்கியவர்.
இந்நிலையில் சிற்பி ஜெகதீசன் கல்லினால் ஆன விநாயகர் சிலை, மாடம் மற்றும் படகுகளை செய்து அசத்தியுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால் விநாயகர் சிலை, மாடம் மற்றும் படகுகள் ஆகியவை தண்ணீரில் மிதக்கும் வகையில் சிற்பி ஜெகதீசன் வடிவமைத்துள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்றாகும். இவரது தண்ணீரில் மிதக்கும் கல் விநாயகரை அக்கம்பக்கத்தினரும், பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருவதுடன், அவரை பாராட்டிச் செல்கின்றனர்.