தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்: பொது மக்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை!
தமிழ்நாட்டில் வெயில் கொளுத்துகிறது. வரலாறு காணாத அளவில் 115 டிகிரி அளவுக்கு வாட்டில் வதைக்கிறது.
இதனால் உணவு, உடை போன்று அன்றாட பழக்கவழக்கங்களில் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டுக்கு முன்பெல்லாம் காற்றோட்டம் அதிகமாக இருந்தது.
தற்போது காற்றோட்டமே இல்லை. அதனால்தான் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. முன்பெல்லாம் காலையில் வெயில் குறைவாக இருக்கும், அதன்பிறகு வெயில் அதிகமாக காணப்படும், மாலையில் வெயில் குறைவாக இருக்கும், கடல் காற்று வீசும். ஆனால் தற்போது அதுபோன்று எதுவும் இல்லை.அதனால் உடலில் உள்ள நீரும், உப்பும் குறைந்து விடும். அதாவது உடலில் 70 சதவீதம் நீர் தான், அந்த நீர் குறைந்தவுடன் உடலில் உள்ள ஒவ்வொரு செல்கள் காய்ந்து சுருங்கி விடும். அதனால் செல்கள் வேலை செய்வது தடைபடும். உடல் வலி, சோர்வு போன்றவை ஏற்படும்.
சென்னை போன்ற கடற்கரை பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொஞ்சமாவது வியர்க்கும், தண்ணீர் தாகம் ஏற்படும். ஆனால் கடல் இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வியர்க்காது, தண்ணீர் தாகம் ஏற்படாது. அவர்கள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.அவர்களுக்கு மயக்கம் ஏற்படவாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீர் மட்டுமல்ல, ஏதாவது நீர் ஆகாரங்கள் இளநீர், மோர், பழச்சாறு போன்ற ஏதாவது குடித்தால் நல்லது.காலையில் எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீரை மொத்தமாக குடிக்கக்கூடாது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் குடிப்பது தான் நல்லது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைந்த அளவு தண்ணீர் மற்றும் நீர் ஆகாரங்களை சாப்பிடுவது நல்லது. இளநீர் தான் குடிக்க வேண்டும் என்று இல்லை, ஏதாவது நீர் ஆகாரங்கள் குடிப்பது நல்லது. அதேபோன்று ஜீரணமாகக்கூடிய வேக வைத்த உணவுகளை உண்பது நல்லது. காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. சைனீஸ் உணவு மற்றும் ஓட்டல் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
தண்ணீரை நன்றாக காய்ச்சி ஆற வைத்து குடிப்பது நல்லது. உடலில் எவ்வளவு வியர்வை வெளியேறுகிறதோ அதை சரி செய்யும் வகையில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலில் தண்ணீர் இல்லையென்றால் உடல்வலி, சோர்வு போன்றவை ஏற்படும். வெயிலினால் மருந்து, மாத்திரைகள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது, அதனால் அளவுக்கு அதிகமான மருந்துகளை வாங்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோன்று மாத்திரைகளை கார், பைக் போன்ற இடங்களில் வைக்கக்கூடாது. மாத்திரைகளை பாதுகாப்பாக தேவையான அளவு மட்டும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இறுக்கமான உடைகளை அணியாமல் காற்றுப் போகும் வகையில் உடைகள் அணிய வேண்டும்.
ஷூ, சாக்ஸ், பனியன் போன்றவற்றை 6 மணி முதல் 8 மணி வரை தான் போட வேண்டும். அதற்கு மேல் அணியக்கூடாது. அதன்பிறகு அதை துவைத்து தான் போட வேண்டும். இல்லையென்றால் உடலில் உள்ள உப்பு பனியன்களில் ஒட்டிக் கொள்ளும் அதன்மூலம் தோல்வியாதி ஏற்படும். சர்க்கரை நோயாளிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அவர்களுக்கு காலில் உள்ள உணர்ச்சிகள் குறைந்து விடும் என்பதால் கால் சுடுவதும், வலியும் தெரியாது. அவர்கள் செருப்பு இல்லாமல் நடக்கக்கூடாது. காலையில் எழுந்திருக்கும் போது காலில் ஏதாவது கொப்பளம் ஏற்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
தற்போது தண்ணீர் மூலம் மஞ்சள் காமாலை பரவக்கூடும், வியர்க்குரு, தட்டம்மை, அக்கி, தோல் வியாதி, உதடுகளில் பிளவு, நாக்கு வறட்சி, வலிப்பு, வயிற்றுவலி, தலைவலி, தலைசுற்றல், செரிமான கோளாறு, படபடப்பு, பேசும் போது உளறல், அரிப்பு போன்றவை ஏற்படும். எனவே, தினமும் இரண்டு முறை சோப்பு போட்டு குளிக்க வேண்டும். வெயிலின் தாக்கம் கண்ணில் படுவதால் கருவிழிகள் சுருங்கிவிடும். பாதுகாப்பான கண்ணாடி அணிய வேண்டும். இல்லையென்றால் வெயில் வருவதற்குள் வெளியில் உள்ள வேலைகளை முடித்து விடவேண்டும். தவிர்க்க முடியாத வேலைகள் இருப்பின் முகத்தை மூடிக் கொள்வதும், தொப்பி அணிந்து செல்வது, சன்ஸ்கிரீம் ஏதாவது பயன்படுத்துவதும் நல்லது.