• Mon. Oct 14th, 2024

கோடை வெயிலில் இருந்து மக்களைத் தற்காத்துக் கொள்ள..,தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு..!

Byவிஷா

May 18, 2023

கோடை வெயிலின் கோரதாண்டவத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் யாரும் நண்பகல் 12 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிருங்கள் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
நேற்று தமிழக தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில், வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதை தடுப்பது குறித்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அனைத்து துறைகளின் செயலாளர்கள் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் வழங்கப்பட்ட அறிவுரைகளைக் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர் எடுத்துரைத்தார். அப்போது அவர், ”கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் தாக்காத வகையில், மனிதன் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும், அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆர்.எஸ் எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும், இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட வேண்டும்.
நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும், மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும், மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்லவும், உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்போது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.. அதேசமயம், வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லக் கூடாது. சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் அதிக வெப்பத்தில், மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *