

கிபி 16ஆம் நூற்றாண்டில், தருமபுரம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு முதல்வர் அவதரித்த வீட்டை, ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி, மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது, இல்லத்தை குரு முதல்வர் கோயிலாக மாற்றம் செய்யப்படும் என மடாதிபதி பேட்டி அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் கிபி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர் கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற 27 தேவஸ்தானங்கள் இந்த ஆதினத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. ஆதீனத்தை, ஸ்ரீவில்லிபுத்தூரில் 16ஆம் நூற்றாண்டில் அவதாரம் செய்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். சைவமும் தமிழும் தழைத்து இங்கு ஓங்குக என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் இந்த ஆதீனத்தின் குரு முதல்வரான ஞானசம்பந்த அவதரித்த இல்லத்தை, சீர்காழி தமிழ் சங்கத் தலைவர் பொறியாளர் இமயவரம்பன் மார்க்கோனி ஏற்பாட்டின் பேரில் தருமபுரம் ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி இன்று ஆதீன மடத்தில் நடைபெற்றது.


குரு முதல்வர் அவதரித்த இல்லத்தை விலைக்கு வாங்கி அதனை தானமாக, மடத்திற்கு 27ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் வசம் பத்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட 27ஆவது குருமகா சன்னிதானம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குரு முதல்வரின் பூர்வீக இல்லத்தை புதுப்பித்து அதன் பின்புறம் கருங்கல் திருப்பணி செய்து, பஞ்சலோகத்தால் குரு முதல்வரின் சிலையை பிரதிஷ்டை செய்து ஆலயமாக கட்டப் போவதாகவும், மேலும் இது சார்ந்த பள்ளியும் அங்கு செயல்படும் என்றும் இதற்கான நடவடிக்கைகளில் சன்னிதானம் ஈடுபடும் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது சீர்காழி சட்டநாதர் தேவஸ்தான மேலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


