சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது. மயிலாடுதுறை சீர்காழி பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் இதற்காக 951 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 82.14 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பில் வாக்கு எண்ணிக்கை மையமான மயிலாடுதுறை அடுத்த மன்னன்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. இன்று தேர்தல் பார்வையாளர்கள் திருமதி நேகாசர்மா, திரு ரோணங்கி குருமநாத், திரு சஞ்சய் குமார் சிங் யாதவ் ஆகியோர் முன்னிலையில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியான ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாக்கப்பட்ட அறையில் மாவட்ட ஆட்சியர் திரு ஸ்ரீகாந்த் முன்னிலையில் பூட்டி, அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 90 காவல்துறையினர் மற்றும் 72 மத்திய பாதுகாப்பு படையினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் அனைத்து இடங்களும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.




