• Wed. Apr 24th, 2024

காதலியை கொன்ற வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

திருமணத்திற்கு மறுத்த காதலியை கடத்தி கொலை செய்துவிட்டு, நீதிமன்றத்தால் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் வினோத். டிப்ளமோ பட்டதாரியான இவர் பொள்ளாச்சியை அடுத்த கோவில் பாளையம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியைச் சேர்ந்த பட்டுராஜன் என்பவரின் மகள் சசிகலா என்பவருடன் வினோத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் சசிகலாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்தனர்.

பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சசிகலா வினோத்திடம் தெரிவித்துள்ளார்.


இதில் ஆத்திரமடைந்த வினோத் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்ப இருந்த சசிகலாவை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். கோவை மலுமிச்சம்பட்டியை அடுத்த பைபாஸ் ரோடு பகுதிக்கு சென்றதும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சசிகலாவை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். அப்போது வினோத் தான் ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த நைலான் கயிற்றால் சசிகலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சசிகலாவின் பெற்றோர் தன் மகள் கடத்தப்பட்டு விட்டதாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் கடத்தல் வழக்கை பதிவு செய்து விசாரித்து வந்த மகளிர் போலீசாருக்கு சசிகலா கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது. கடத்தல் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வினோத்தை மகளிர் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜாமினில் வெளிவந்த வினோத் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு கோவை மகிளா நீதிமன்றம், வினோத்தை தலைமறைவு குற்றவாளி என அறிவித்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி மேற்பார்வையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் போலீஸ்காரர் கணேஷ் ஆகிய இருவர் கொண்ட தனிப்படை தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. வினோத்தின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், அவர் வேலை செய்த இடங்கள் என பல தரப்பிலும் தனிப்படை விசாரித்ததில் உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.


இந்நிலையில் வினோத்தின் ஆதார் கார்டு எண்ணை மட்டும் துருப்பு சீட்டாக வைத்துக்கொண்டு தனிப்படையினர் நடத்திய விசாரணையில் திருப்பம் ஏற்பட்டது. அந்த ஆதார் எண்ணைக் கொண்டு சேலத்தில் உள்ள ஒரு வங்கியில் வினோத் கணக்கு துவங்கி உள்ளது தெரிய வந்தது.
அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்துவோர் குறித்த விவரங்களை சேகரித்து அவர்களிடம் நடத்திய ரகசிய விசாரணையின் முடிவில் சேலத்தில் வேலை பார்த்துவந்த வினோத் அங்கிருந்து ஈரோடு சென்று பிறகு திருப்பூரில் ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்ப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்பிறகு அதிரடியாக களம் இறங்கிய தனிப்படையினர் வினோத்தை திருப்பூரில் வைத்து கைது செய்தனர்.


பொள்ளாச்சி மகளிர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். காதலியை கொலை செய்துவிட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி உள்ளிட்டோர் பாராட்டினர்.

இதற்கிடையே கடந்த 2017ம் ஆண்டு தனது மகனை காணவில்லை என்று வினோத்தின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கும் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *