• Wed. May 27th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பேச்சு..,

Byமுகமதி

May 27, 2026

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு 2026-2027 – ம் கல்வியாண்டில் ஜூன் 4- ந்தேதி அன்று பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் , பள்ளிக்கல்வி இயக்குநர் ஆகியோரின் சிறப்பான வழிகாட்டலினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வித்துறையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதனால் 2025-2026 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் 97.57 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தினை பிடிக்க முடிந்தது.

இதில் 94 அரசுப்பள்ளிகள் உள்ளிட்ட 174 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. 1974 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருச்சி தஞ்சாவூர் ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து பல பகுதிகளை பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டு 52 ஆண்டுகள் கழித்து இப்போது முதல் முறையாக தமிழக அளவில் உள்ள 38 மாவட்டங்களில் முதல் இடத்தை இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் பெற்று இருக்கிறது.

இதில் 100 சதவீத தேர்ச்சி பெறாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இந்த ஆண்டில் பள்ளி திறந்த நாள் முதல் சிறப்புக்கவனம் செலுத்தி 100 சதவீத தேர்ச்சிக்கு முயற்சிக்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை உயர் அலுவலர்கள் அறிவுறுத்தலுக்கிணங்க பள்ளிகள் திறந்த நாளன்றே மாணவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கவேண்டும்.

பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக பள்ளி வளாகத்தூய்மை, கழிப்பறைத்தூய்மை, வகுப்பறைத்தூய்மை, குடிநீர்த் தொட்டித் தூய்மை மற்றும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ள அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடித்து அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து பணி ஓய்வு பெற்ற புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ், அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 11 பேர், அரசு உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 7 பேர், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 2 பேர் ஆக மொத்தம் பணி ஓய்வு பெற்ற 21 பேர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

இந்தக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் ( இடைநிலைக்கல்வி) முனைவர் ஆரோக்கியராஜ், புதுக்கோட்டை தனியார் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலர் பழனிவேலு , புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் ( தொடக்கக்கல்வி) கனகராணி, அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர்( தொடக்கக் கல்வி) கலாராணி, அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி- பொ) ராஜேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் செந்தில், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், வெள்ளைச்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குருமாரிமுத்து, இளையராஜா மற்றும் தலைமையாசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.