• Fri. Apr 26th, 2024

தேர்தல் சட்ட திருத்த மசோதா – இந்தியாவை ஒரே தேர்தலுக்கு தயாராக்குகிறதா பா.ஜ.க?

Byமதி

Dec 20, 2021

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. கள்ள ஓட்டை தவிர்க்க மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதால் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவாதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் குளிர்கால கூட்டத்தொடர் முடிய 4 வேலை நாட்களே எஞ்சியிருக்கும் சூழலில், இந்த மசோதாவை தாக்கல் செய்வது ஏன்? என கேள்வி எழுப்புகின்றன.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதுவரை இல்லாத அளவுக்கு அதிபெரும்பான்மையுடன் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அன்று முதல் தாங்கள் நினைப்பதை எல்லாம் சட்டமாக்கி கொண்டு வருகின்றனர் மத்திய அரசினர். நலத்திட்டங்கள் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட பலவேறு திட்டங்களை மக்கள் எதிர்த்தாலும் அதிரடியாக அதை கொண்டுவந்தது பா.ஜ.க அரசு. GST வரி, ரூபாய் நோட்டுகளை மாற்றி பண மதிப்பிழப்பை ஏற்படுத்தியது, வங்கிகளை தனியார் மயமாக்குவது, ரயில்வே துறையை தாரைவார்ப்பது, கொரோனவை போக்க கைதட்ட சொல்லியது, விளக்கு ஏற்ற சொல்லியது என பல உள்ளது.

தற்போது ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


21 ஆம் நூற்றாண்டில் உலகின் முன்னணி நாடாக உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் சீர்திருத்தம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என அரசு கூறி வருகிறது. இதேபோல் கடந்த 2010 ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடியும் அனைத்து மேடைகளிலும் ஒரே நாடு ஒரே திட்டம் காலத்தின் கட்டாயம் என பேசி வருகிறார். மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர், இந்த திட்டம் வெறும் விவாதப் பொருள் மட்டும் அல்ல இது காலத்திற்கான தேவை என வலியுறுத்தியுள்ளார். இதற்கான அடுத்த கட்ட முயற்சியாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது தான்.

ஆதார் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று, ஆதார் எண்ணை கட்டாயமாக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒரே நபர் பல இடங்களில் வாக்காளராக பதிவு செய்து கொள்வதை தடுக்கவே இந்த புதிய முயற்சி என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

அத்துடன் நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் ஆகியவற்றுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை அமல்படுத்தவும் மத்திய அரசு முயற்சி செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற குறிக்கோளை நோக்கி மத்திய அரசு நகர்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாகவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதற்கு வழிகோலும் தேர்தல் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால், மக்களவையில் இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க எதிர்க்கட்சிகள் முனைப்புக் கொண்டுள்ளன. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டாலும், குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் சில தினங்கள் மட்டுமே நடைபெறவிருப்பதால், மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *