கீழடி முதல் இரண்டு கட்டத்திற்கான அகழாய்வு அறிக்கையை திருத்த மறுத்து இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஏஎஸ்ஐ-க்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இந்திய தொல்லியல் துறை சார்பாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இந்த அகழாய்வின் தொல்லியல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணா, முதல் இரண்டு கட்ட ஆய்வறிக்கையை கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார். 982 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருட்கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.
அது மட்டுமன்றி, கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தமது அறிக்கையில் அவர் தெளிவுபடுத்தியிருந்தார். கி.மு. 800-500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு பழமையான நகரத் தமிழ் நாகரிகத்தின் சான்றுகளை கண்டறிந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அறிக்கை தாக்கல் செய்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் கூட இந்திய தொல்லியல் துறை, கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையை ‘தெளிவற்றது, முழுமையற்றது மற்றும் போதிய விளக்கமற்றது’ என மதிப்பீட்டுக் குழு விமர்சித்திருந்தது. தொடர்ந்து, மீண்டும் திருத்தி எழுதி சமர்ப்பிக்குமாறு தொல்லியல் துறை அவருக்கு கடிதம் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறைக்கு பதிலளித்த அமர்நாத் ராமகிருஷ்ணா, “அறிவியல்பூர்வமான தொல்லியல் சான்றுகளை கொண்டு தான் கீழடி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை” என தெரிவித்தார்.
அக்குழுவின் மதிப்பீடு, துல்லியமற்றது, செயற்கை நுண்ணறிவு (கிமி) உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக தோன்றுகிறது எனவும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இயக்குநராக உள்ள அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கும், தொல்லியல் துறை மதிப்பீட்டுக் குழுவிற்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் தேசிய பணிக்குழு (ழிவிவிகி) இயக்குநராக உள்ள அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு, மார்ச் 27-ம் தேதி தொல்லியல் துறை மீண்டும் கடிதம் அனுப்பியது. அதில் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பதிலை மறுபரிசீனை செய்து, மதிப்பீட்டு குழு குறிப்பிட்டிருந்தவாறு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அகழாய்வு பிரிவு இயக்குநர் ஹெம்சாகர் ஏ. நாயக், அமர்நாத் ராமகிருஷ்ணா உடனடியாக இணக்கம் தெரிவிக்கும் அறிக்கையை (நீஷீனீஜீறீவீணீஸீநீமீ க்ஷீமீஜீஷீக்ஷீt) சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த மே 11-ஆம் தேதி அமர்நாத் ராமகிருஷ்ணா ஏஎஸ்ஐ-யின் உள் ஆய்வுக்குழுவுக்கு அனுப்பிய மறுப்புக் கடிதத்தில், தனது மனசாட்சிக்கும், தொல்லியலில் தனக்கு இருக்கும் சிறந்த அறிவின் அடிப்படையில் உண்மையாகவே அந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், எனவே தகுதி வாய்ந்த அதிகார அமைப்பின் சார்பில் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு சட்டப்பூர்வமான அறிவுறுத்தலையும் நான் மீறியிருப்பதாகக் குற்றம் சாட்டுவது தவறு. கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் நான் சமர்ப்பித்த எனது கீழடி அகழாய்வு அறிக்கையின் நகலை, அதன் மீது உள் மதிப்பீட்டு ஆய்வுக் குழுவின் விமர்சனக் குறிப்புகளோ என்னிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.
ஆனால், மாறாக என்னுடைய அறிக்கையை மேம்படுத்துமாறு கோரியபோது, அக்குழு எவ்விதமான ஏற்புடைய காரணங்களையோ அல்லது தகுந்த நியாயங்களையோ குறிப்பிடவில்லை. ‘விமர்சன மதிப்பீடு மற்றும் பரிந்துரைகள்’ என்ற தலைப்பிலான 114 பக்க அறிக்கையை அவர்கள் எனக்கு அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையிலானது. மேலும் கீழடி அகழாய்வு இயக்குநராக எனது கடமைகளை நிறைவேற்றியபோது இந்தியத் தொல்லியல் துறையில் எதிர்பார்க்கப்படுவதைப் போலவும், பின்பற்றப்படுவதைப் போலவும் மிக உயர்ந்த தொழில்முறை நேர்மையோடு, எனது முழுத் திறனையும் பயன்படுத்தி மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளேன்.

அதுபோலவே எனது அறிக்கையை எழுதியபோதும், தொல்லியல் துறையின் விதிமுறைகளின் அடிப்படையையே பின்பற்றினேன். மேலும் அகழாய்வு செய்யப்பட்ட தளத்திலிருந்து கிடைத்த பொருட்களை கலாச்சார மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் நியாயமாகவும், பாரபட்சமின்றியும் எனது முடிவுகளைத் தெரிவித்துள்ளேன். இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள எனது முடிவுகள் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. இந்த அறிக்கை மிகுந்த நேர்மையோடும், முழுமையான நம்பகத்தன்மையோடும் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனது முந்தையை அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லை. நிறுவப்பட்ட நிர்வாக நெறிமுறைகள் மற்றும் பணி விதிகள் ஆகியவற்றின்படி எனக்கு வழங்கப்பட்ட எந்தவொரு அறிவுறுத்தலையும் கடைப்பிடிக்க நான் மறுத்ததில்லை’ என அக்கடிதத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணா குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





