• Mon. Mar 17th, 2025

லாஸ் ஏஞ்சல்ஸில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம்!

ByP.Kavitha Kumar

Mar 3, 2025

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 23 பிரிவுகளில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் தொகுத்து வழங்குகிறார். அதில் ஸ்பானிஷ் திரைப்படமான ‘எமிலியா பெரெஸ்’ என்ற படத்தில் நடித்த திருநங்கையான கார்லா சோபியா காஸ்கான் புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஏனெனில், இவர் தான் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வான முதல் திருநங்கை ஆவார்.

சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட 13 பரிந்துரைகளைப் பெற்ற எமிலியா பெரெஸ் இந்த ஆண்டு பரிந்துரைகளில் முன்னணியில் உள்ளது. சிறந்த படத்திற்கான போட்டியில் எமிலியா பெரெஸ் அனோரா, தி ப்ரூடலிஸ்ட், எ கம்ப்ளீட் அன்னோன், கான்க்ளேவ், டூன்: பார்ட் டூ, ஐ ஆம் ஸ்டில் ஹியர், நிக்கல் பாய்ஸ், தி சப்ஸ்டென்ஸ் மற்றும் விக்கட் ஆகியவற்றிலிருந்து போட்டியை எதிர்கொள்கின்றன. சிறந்த நடிகைக்கான பிரிவில் சிந்தியா எரிவோ, கார்லா சோபியா காஸ்கான், மைக்கி மேடிசன், டெமி மூர் மற்றும் பெர்னாண்டா டோரஸ் ஆகியோர் சிறந்த நடிகைக்கான விருதுக்கு போட்டியிட்டுள்ளனர்.

சிறந்த துணை நடிகருக்கான விருதை ஐசன்பெர்க்கின் எ ரியல் பெயின் படத்தில் நடித்த கீரன் கல்கின் வென்றார். இந்த விருதை ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ராபர்ட் டவுனி ஜூனியர் வழங்கினார். இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை வென்றது. இயக்குனர் ஜான் எம் சூவின் விக்கெட் திரைப்படத்திற்காக, பால் டேஸ்வெல் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான அகாடமி விருதை வென்றார்.

நகைச்சுவை நாடகமான அனோரா நாடகத்திற்காக சீன் பேக்கர் சிறந்த எழுத்துக்கான ஆஸ்கார் விருதை பெற்றார். நோ அதர் லேண்ட் சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற நிலையில், தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை வென்றது. இயக்குனர் டெனிஸ் வில்லெனுவேவின் டூன்: பார்ட் டூ சிறந்த ஒலி மற்றும் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவுகளில் வெற்றி பெற்றது. விருது வழங்கும் விழா ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. மேலும் ஸ்டார் மூவிஸ் மற்றும் ஸ்டார் மூவிஸ் செலக்ட் ஆகியவற்றில் பார்க்கலாம்.