• Wed. Mar 26th, 2025

அரசு பேருந்து ஓட்டுனர், கல்லூரி மாணவர்கள் இடையே வாக்குவாதம்

Byஜெ.துரை

Mar 2, 2025

ஊத்துக்குளி அருகே அரசு பேருந்து ஓட்டுனர், கல்லூரி மாணவர்கள் இடையே வாக்குவாதம்.
பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து ஓட்டுநருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ஒடைய குளம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி 12ம் எண் கொண்ட அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் அதே வழியாக கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் காரில் வந்துள்ளனர்.

இந்நிலையில் அரசு பேருந்து மற்றும் கார் இயக்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.தொடர்ந்து ஜமீன் ஊத்துக்குளி பேருந்து நிலையம் அருகே கார் ஓட்டி வந்த கல்லூரி மாணவர்கள் – அரசு பேருந்து இயக்கி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்து அப்பகுதி வழியாக வந்த மற்ற அரசு பேருந்துகளும் ஆங்காங்கே சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நேரத்தில் பொள்ளாச்சி ஆழியார் பிரதான சாலையில் அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் என பலரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டனர்.