• Mon. Mar 17th, 2025

அப்பளம் போல நொறுங்கிய கார்- பிரபல பாடகி துடிதுடித்து சாவு

ByP.Kavitha Kumar

Mar 3, 2025

சரக்கு வாகனம் மோதியதில் அமெரிக்காவின் பிரபல ராப் பாடகி ஆங்கி ஸ்டோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆங்கி ஸ்டோன் (63). பிரபல ராப் பாடகியான இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் பாடிய நோ மோர் ரெயின், மோர் தான் ய வுமன் உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் இவரது ரசிகர்களிடையே பிரபலம். இதற்காக சிறந்த பாடகர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கிராமி விருதுக்கு ஆங்கி ஸ்டோன் பெயர் மூன்று முறை பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அலபாமா மாகாணத்தில் நடைபெற்ற சென்ட்ரல் இன்டர்காலேஜியேட் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து விளையாட்டின் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆங்கி ஸ்டோன் சென்றார். தனது இசைநிகழ்ச்சியை முடித்து விட்டு அவர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மாண்ட்கோமரி என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அவரின் கார் மீது ஒரு சரக்கு வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் ஆங்கி ஸ்டோன் பயணம் செய்த கார், அப்பளம்போல நொறுங்கியது.

இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, விபத்தில் ஆங்கி ஸ்டோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. காரில் மோதிய சரக்கு வாகனத்தில் பயணித்த 7 பேரும் காயங்களுடன் உயிர்தப்பினர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆங்கி ஸ்டோன் விபத்தில் உயிரிழந்தது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.