• Mon. Jun 5th, 2023

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பிறப்பும், சர்ச்சையும்

தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது இனி அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.


இந்த நேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து உருவான சம்பவமும், அதுகுறித்த சர்ச்சை சம்பவமும் அறிந்திருக்க வேண்டியது கட்டாயம். தமிழ்நாட்டிற்கு திராவிட இயக்கங்கள் தமிழ் சார்ந்து தமிழர் நலன் சார்ந்து செய்த இரு முக்கிய விஷயங்களாக கருதப்படுபவை 1967ம் ஆண்டு தமிழ்நாடு என்று அண்ணாதுரை பெயரிட்டது.மற்றொன்று 1970 ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த தமிழ்நாட்டு மாநிலத்திற்கான தமிழ்த்தாய் வாழ்த்துபாடல்.
இந்த தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை இயற்றிவர் மனோன்மணியம் சுந்தரனார்.மலையாள தேசத்தில் பிறந்தாலும் தமிழ் மீது கொண்ட பற்றால் 1891 ம் ஆண்டு அவர் எழுதிய மனோன்மணியம் என்ற நாடக நூலில் உள்ள ஒரு பாயிரத்தில் தமிழ்த்தாய் தெய்வ வணக்கம் என்ற தலைப்பிலுள்ள ஒரு பகுதியே இந்த தமிழ்த்தாய் வாழ்த்துப்பாபாடல் ஆகும்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்
கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன்உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

இதில்
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்
கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன்உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா

என்ற வரிகள் தமிழை உயர்த்தி பேசுவதற்காக மற்ற மொழிகளை தாழ்த்தி பேசுவது போல இருப்பதாக கருதி அந்த வரிகளை நீக்கி விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அறிமுகப்படுத்தினார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

அதோடு மட்டுமல்லாமல், அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்த அரசாணையில் (Memo No: 3584/70-4dated 23 November 1970) “அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யும் விழாக்கள் அனைத்திலும் விழா தொடக்கத்தில் ‘கடவுள் வாழ்த்து’ பாடலாக பாடவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளபடி, மோகனம் ராகத்திலும், திஸ்ரம் தாளத்திலும் தான் பாடவேண்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சங்கராச்சாரியாரும் சர்ச்சையும்

தமிழ்நாட்டில் 2018 ம் ஆண்டு முன்னாள் ஆளுநர் பன்வாரி லால் புரோகித் கலந்து கொண்ட ஒரு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல் அவமதிப்பு செய்ததாக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.அது குறித்து பல கருத்துகளும் அப்போது உலாவி வந்தன.
இது பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா நடத்திய தனிப்பட்ட விழா.கவர்னர் பங்கேற்பதால் இது அரசு விழாவாக மாறிவிட முடியாது என்று கூறினர்.மேலும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைப்பது திராவிட இனவெறி , கம்யூனிஸ்டுகள் போலி மதசார்பின்மை பேசுவதாக ஓங்கி குரல் கொடுத்தனர். காரணம் இவர்கள் இறை நம்பிக்கை கொண்ட மனோன்மணியம் சுந்தரானரை திராவிட இனவெறி பிடித்தவர் என்று குற்றம்சாட்டுகின்றனர்.
விழாவின் இறுதியில் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றவர், தமிழ்த்தாய் வாழ்த்தின் போது அவர் தியானம் செய்துள்ளது தமிழ்த்தாயைப் போற்றி வழிபடும் செயலே அன்றி சர்ச்சை ஆக்கும் அளவிற்கு மரியாதைக் குறைவல்ல என்று பகிரங்கமாக பரப்பினர்.

சர்ச்சைக்குரிய நீதிபதி

காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு சென்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை. மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்க பாடல். தேசிய கீதம் அல்ல. இவ்வாறு எழுந்து நின்றுதான் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தியான நிலையில் கண்களை மூடிய நிலையில் இருந்துள்ளார். தாய் மொழி தமிழுக்கு அவர் அவரது வழியில் உரிய மரியாதை செலுத்தியுள்ளார்.” எனக் கூறினார்.

தற்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு கட்டாயம் அனைவரும் எழுந்து நின்று, கட்டாயம் பாடவேண்டும் என சட்டத்தின் வழி நின்றே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை என்ற நிலையை மாற்றும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார்.
தற்போது இதே நீதிபதி தான் மாரிதாஸ் வழக்கில் தீர்ப்பு வழங்கி சர்ச்சையில் சிக்கினார்என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *