• Fri. Apr 19th, 2024

டி20 உலகக் கோப்பை – இந்தியா படுதோல்வி…

Byமதி

Nov 1, 2021

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்த இரு அணிகளுமே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த இந்தியா அணியில்,
கே.எல்.ராகுல், இஷான் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். இஷான் 4 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் சான்ட்னர் வசம் பிடிபட்டார். அடுத்து ராகுலுடன் ரோகித் ஷர்மா இணைந்தார். ராகுல் 18 ரன் எடுத்து சவுத்தீ பந்துவீச்சில் வெளியேறினார்.

ரோகித் 14 ரன், கேப்டன் கோஹ்லி 9 ரன் எடுத்து ஈஷ் சோதி சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 48 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. பன்ட் – ஹர்திக் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 22 ரன் சேர்த்தது. பன்ட் 12 ரன் எடுத்து மில்னி பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கடைசி கட்டத்தில் ஹர்திக், ஜடேஜா இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர். ஹர்திக் 23 ரன், ஷர்துல் ரன் எதுவும் எடுக்கமலும் இருவரும் போல்ட் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்தது. ஜடேஜா 26 ரன், ஷமி ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் போல்ட் 3 விக்கெட் கைப்பற்றினார். சோதி 2, சவுத்தீ, மில்னி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 14.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து அபாரமாக வென்றது. டேரில் மிட்சல் அதிகபட்சமாக 49 ரன் விளாசினார். குப்தில் 20 ரன், கனே வில்லியம்சன் 33 ரன் தேவோன் கன்வே 2 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியால் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்ட நிலையில், தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உடனான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி என அடுத்தடுத்து இரண்டு படுதோல்விகளை அடைந்துள்ளது இந்தியா. கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு இந்தியா முன்னேறுவது இப்போது கடினமாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *