

கோவையில் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்துவந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை எனக்கூறி மாணவி மாற்றுச் சான்றிதழ் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முயன்று வந்த நிலையில், வீட்டில் மாணவி இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவி, அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அந்த மாணவி எழுதியுள்ள கடிதத்தில், ”யாரையும் சும்மாவிடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா, எலிசா சாருவோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

குற்றம்சாட்டப்பட்ட அந்த ஆசிரியர் மிதூன் சக்கரவர்த்தி தலைமறைவாகி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காவலர்கள் தற்போது அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதற வைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மக்கள் நீமி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.