

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய, மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரமான இன்று, அவரின் 1036-வது சதய விழா இன்று காலை 6 மணிக்கு பெரிய கோவிலில் மங்கள இசையுடன் தொடங்கியது.
இதையடுத்துக் கோயில் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டது. பின்னர், தேவாரம் நுாலுக்கு ஓதுவார்கள் சிறப்புப் பூஜைகள் செய்து, கோவிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாகக் கொண்டுவந்து, நந்தி மண்டபத்தில் பாராயணத்தைப் பாடினர்.
இதனைத் தொடர்ந்து கோவிலின் வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சதய விழாக்குழுத் தலைவர் து.செல்வம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுர ஆதீனம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, குஜராத்திலிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்ட ராஜராஜ சோழன், உலோகமாதேவி உலோகச் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 38 மங்கலப் பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மாலை கோவிலின் பிரகாரத்தில், ராஜராஜ சோழன் மற்றும் உலோகமாதேவிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, புறப்பாடு நடைபெறுகிறது. ராஜராஜ சோழன் சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதப் பகுதிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
