• Fri. Apr 19th, 2024

சபரிமலை சாமி தரிசனம் – குழந்தைகளுக்கு முன்பதிவு தேவை இல்லை

Byமதி

Dec 2, 2021

சபரிமலை தரிசனத்திற்கு வரும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கேரளாவில் பலத்த மழை காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இதன் ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக பல்வேறு கட்டமாக தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 முதல் 18 வயதிற்குட்பட்ட பக்தர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் நகல் தரிசனத்திற்கு வரும் போது கொண்டு வர வேண்டும். ஆனால், குழந்தைகள் உள்பட அனைவரும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல், எருமேலி உட்பட 10 இடங்களில் தரிசனத்திற்கான உடனடி முன் பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. நிலக்கல்லில் மட்டும் இதற்காக 4 மையங்களில் முன் பதிவு நடைபெற்று வருகிறது. ஆன்லைன் முன் பதிவு மற்றும் உடனடி முன் பதிவு சேவைகள் கேரள காவல் துறை மூலம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் பணம் செலுத்தி முன் பதிவு செய்ய தேவை இல்லை.

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் இலவசமாக முன் பதிவு செய்யும் பக்தர்கள், ஆன் லைன் மூலம் பணம் செலுத்தி அப்பம், அரவணை உள்பட பிரசாதங்களுக்கும் சேர்த்து முன் பதிவு செய்ய வசதி உள்ளது. இதனால் சன்னிதானத்தில் பிரசாதத்திற்காக காத்து நிற்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *