

தேனி நகர இந்து எழுச்சி முன்னணி சார்பாக, நகரத் தலைவர் சிவராம் தலைமையில் அந்த அமைப்பினர் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் அவர்களிடம் மனு ஒன்றை வழங்கினார்.
அந்த மனுவில், தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் அமைந்துள்ள வீரப்ப அய்யனார் கோயிலுக்கு செல்வதற்கான பாதை, கம்பம்-திண்டுக்கல் பைபாஸ் சாலையுடன் இணைந்துள்ள ஒரு முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த பாதையில் விவசாயிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி அதிகமாக பயணிக்கின்றனர். வாகனங்கள் அதிக வேகத்தில் செல்லும் காரணத்தால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதற்கான முக்கிய தீர்வாக, இந்த பகுதியில் ஒரு ரவுண்டானா அமைப்பது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதன் மூலம் போக்குவரத்து ஒழுங்குமுறைப் படுத்தப்பட்டு, விபத்துகள் குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அல்லிநகரம் மலை கோவிலுக்கு செல்லும் பாதையில் ரவுண்டானா அமைக்க தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். நிகழ்வில், மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


