ரிட்லி ஸ்காட் இயக்கிய ஹாலிவுட் படம் ‘தி லாஸ்ட் டூயல்’ டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. ஒரு உண்மை வரலாற்று நிகழ்வாக இருந்தபோதும், அதை அகிரா குரோசாவாவின் ‘ரஷோமான்’ படத்தை நினைவுபடுத்தும் விதமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
ஒரு கற்பழிப்பு – அதற்காக நடக்கும் நீதி விசாரணை – பெண், கணவன், வன்புணர்ந்தவன் என்று சம்பந்தப்பட்ட மூன்று பேரின் கண்ணோட்டத்தில், ஒரே சம்பவங்கள் தனித்தனியாக மூன்று முறை விவரிக்கப்படுவது போன்றவை இதிலும் உண்டு.
ஆனால் இதில், அந்தப் பெண், நியாயம் வேண்டி, தனக்கு ஆபத்தாக முடியலாம் என்று தெரிந்தே, வழக்கை முன்னெடுக்கிறாள். அவளது கணவன், அவளுக்குக்காகத் தன் உயிரைப் பணயம் வைக்கிறான். இறுதியில் தீர்ப்பை வழங்கும் பொறுப்பு கடவுளிடம் விடப்படுகிறது. கணவனுக்கும் கற்பழித்தவனுக்கும் இடையில் சாகும் வரையிலான ஒரு சண்டை ஏற்பாடு செய்யப்படுகிறது. யார் சாகிறார்களோ அவனைக் கடவுளே தண்டித்தார், அதுவே கடவுளின் தீர்ப்பு என்று ஏற்றுக்கொள்ளும் பழக்கம் பழங்கால ஃபிரான்ஸில் இருந்திருக்கிறது. ஒருவேளை கணவன் இறந்தால், பொய் வழக்குப் போட்டதற்காக மனைவி எரித்துக் கொல்லப்படுவாள் என்பது கூடுதல் சிக்கல்.
நண்பர்களான மாட் டாமன், பென் அஃப்லெக் இதில் நடித்ததோடு, ‘குட் வில் ஹன்டிங்’ முதல் தொடரும் அவர்களது கூட்டணியின் திரைக்கதைப் பங்களிப்பு இதிலும் இருக்கிறது. சமீப காலத்தில் மிகச் சிறந்த நடிகராக உயர்ந்துவரும் ஆடம் டிரைவர் இதிலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
பெண்ணின் மன உள் அடுக்குகள் புரிந்துகொள்ள முடியாத சிக்கல்களுடன் இருப்பதைப் படம் முன்வைக்கிறது. குழந்தைக்காக ஏங்கிய நாயகி, தன் கணவனால் குழந்தை பிறப்பிக்க முடியாத சூழலில், வன்புணர்வில் உண்டான கர்ப்பத்தை மகிழ்ச்சியுடன் ஈன்றெடுக்கிறாள். படத்தின் இறுதியில் அவளை நாம் புரிந்துகொண்டது போலவும், புரிய முடியாதது போலவும் ஒரே சமயத்தில் தோன்றும்படியாக ஒரு அழுத்தமான முகபாவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜூடி கோமர்.