• Tue. Oct 8th, 2024

திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு-மனித உரிமை ஆணையம் விசாரணை

ByA.Tamilselvan

Mar 31, 2023

ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்துள்ளது
சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பேசுப்பொருளாகியுள்ளது. இதையடுத்து நரிக்குறவர்களை அனுமதிக்காததற்கான காரணம் குறித்து ரோகிணி திரையரங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், யு/ஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்துள்ளது. குறிப்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் அதிகாரி எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை, ரோகிணி திரையரங்கத்தின் வளாகத்திற்கு பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் அழைகப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரோகிணி திரையரங்க உரிமையாளரிடமும் விசாரணை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *