• Thu. Apr 25th, 2024

வெளிநாட்டு நிறுவனத்துக்கு சலுகை.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் விதித்த கெடு!

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தத்தை பதிவு செய்ய 26.80 கோடி ரூபாய் பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகர மக்களின் குடிநீர் பிரச்னையை போக்க, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் இரண்டாவது அலகு அமைக்க முடிவெடுக்கப்பட்டு, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரேபிய நாட்டு நிறுவனங்களின் கூட்டு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

ஜெர்மனி வங்கி கடனுதவியுடன் ஆயிரத்து 259 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. திட்டம் தொடர்பாக கூட்டு நிறுவனங்களின் ஒப்பந்தத்தை பதிவுத்துறையில் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் 26 கோடியே 80 லட்சம் ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்து, கடந்த 2020 அக்டோபரில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், திட்டத்தை செயல்படுத்தும் கூட்டு நிறுவனங்களின் ஒப்பந்தத்தை பதிவு செய்வது கட்டாயம் எனவும், பதிவுக் கட்டணம், திட்டத்தின் நிதியுடன் சேர்ந்ததல்ல என்பதால், கட்டண விலக்கு வழங்கியது சட்டவிரோதமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *