• Fri. Apr 26th, 2024

’மகப்பேறு நிதியுதவி முழுமையாக கிடைப்பதில்லை’ கர்பிணி பெண்கள் புகார்;

By

Aug 30, 2021

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வழியாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை பெண்கள், கர்ப்பமுற்று 12 வாரத்துக்குள், கிராம மற்றும் நகர செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து ‘பிக்மி’ எண் பெறுவர். இதை பெற்றவுடன், ரூ.2,000 அக்கர்ப்பிணிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தொடர்ந்து, பதிவு செய்து நான்காவது மாதத்துக்குப் பிறகு 2-வது தவணையாக அவர்களுக்கு மேலும் ரூ.2,000 வழங்கப்படும்.

இதற்கிடையில், உடல் திறனை மேம்படுத்தும் விதமாக இரும்புச்சத்து டானிக், உலர் பேரீச்சை, புரதச்சத்து பிஸ்கட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தலா ரூ.2,000 மதிப்புள்ள 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.

இவையன்றி, அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் 3-வது தவணையாக ரூ.4,000; பேறு காலம் முடிந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4,000; குழந்தைக்கு 9 மாதம் முடிந்தவுடன் 5-வது தவணையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது

இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதில் ஒன்றான தருமபுரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருசிலருக்கு குழந்தை பிறந்து, 2 ஆண்டுகள் ஆகியும் நிதியுதவி வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

கர்ப்பிணிகளிடம் ரூ.18,000 நிதிக்கு, பணம் கொடுத்தால் மட்டுமே, செவிலியர்கள் விவரங்களை பதிவு செய்து கொள்கிறார்கள். ஆனால் பணம் கொடுத்தும், எங்களுக்கு நிதி கிடைக்கவில்லை. செவிலியர்கள் முறைகேடு செய்கிறார்கள்” என அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

மகப்பேறு நிதி உதவி கிடைக்காத கர்ப்பிணிகளுக்கு உடனடியாக நிலுவையில் உள்ள தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *