புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. ஜூலை 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் வெங்கைய நாயுடு நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யஷ்வந்த்சின்கா மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராக உள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார். இதற்காக அவர் மம்தா பானர்ஜிக்கு தனது நன்றியை தெரிவித்து உள்ளார்.